சாமி ஸ்கொயர் மூலம் பாடகராக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ்
வேலுசாமி (Author) Published Date : Jul 24, 2018 10:28 ISTபொழுதுபோக்கு
சாமி, அருள் படங்களுக்கு பிறகு இயக்குனர் ஹரி மற்றும் சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'சாமி ஸ்கொயர்'. கடந்த 2003இல் வெளியான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரி, சூரி, தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு உரையாடினர்.
இதன் பிறகு இந்த படத்தின் பாடல்களை படக்குழுவினர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த பாடல்களில் இடம் பெற்றுள்ள 'புது மெட்ரோ ரயில்' என்ற பாடலை சீயான் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடியுள்ளனர். இதன் மூலம் நடிகையாக இருந்த கீர்த்தி சுரேஷ் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.
ஏற்கனவே சீயான் விக்ரம் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 'கந்தசாமி' படத்தின் எக்ஸ் க்யூஸ் மீ, இதெல்லாம் டூப்பே, மாம்போ மாமியா, மியா மியா போன்ற பாடல்களை பாடியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் விக்ரம் தனது குரலை பதிவு செய்துள்ளார். இது தவிர இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், ஜிவி பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, தமீன்ஸ் ஆகியோரது இசையிலும் சீயான் விக்ரம் தனது குரலை பதிவு செய்துள்ளார்.
சிங்கம் 3 படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீடு தேதியினை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.