அனுஷ்காவின் பாகமதி படம் உருவான விதம்
வேலுசாமி (Author) Published Date : Jan 24, 2018 10:32 ISTபொழுதுபோக்கு
நடிகை அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஜி அசோக் இயக்கத்தில் 'பாகமதி' படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்களை த்ரில்லரில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அசோக், அனுஷ்கவிற்காக பாகமதி படத்தின் கதையை 2012 லேயே எழுதி முடித்துள்ளார். ஆனால் நடிகை அனுஷ்கா, பாகுபலி, ருத்ரம்மா தேவி, லிங்கா, பாகுபலி 2 போன்ற படங்களில் பிசியாக இருந்ததால் படப்பிடிப்பு தாமதம் ஆனது.
இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு 2016-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த படத்தில் நடிகை அனுஷ்கா சஞ்சலா என்ற பெயரில் ஐஏஎஸ் அதிகாரி கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக தனது உணவு பழக்கத்தை மாற்றி கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு முதலில் 'பாக்மதி' என்ற பெயரில் இருந்தது. இதனால் 16-ஆம் நூற்றாண்டு காலங்களில் ஆட்சி செய்த 'பாக்மதி' என்ற இந்து ராணியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தது. இதை இந்த படத்தின் இயக்குனரான அசோக் மறுத்து, இந்த படம் சாதாரண சோசியல் டிராமா படம் தான் என்று தெரிவித்து படத்தின் தலைப்பையும் 'பாகமதி' என்று மாற்றியுள்ளார்.
இந்த பெயர் நேபாளத்தில் ஓடும் 'பாக்மதி' என்ற ஆற்றிலிருந்தும் , ஐதராபாத் என்ற பெயர் உருவான வரலாற்றை சார்ந்ததாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கில் யுவி கிரியேஷன் சார்பில் வி வம்சி கிருஷண ரெட்டியும், தமிழில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கேஇ ஞானவேல் ராஜாவும் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் சில காட்சிகள் டப் செய்யாமல் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.