கொரில்லா படக்குழுவினருக்கு பீட்டா அமைப்பு கோரிக்கை
வேலுசாமி (Author) Published Date : Apr 19, 2018 15:16 ISTபொழுதுபோக்கு
பீட்டா (People for the Ethical Treatment of Animals - PETA) என்ற அமைப்பு ஐக்கிய அமெரிக்க நாட்டின் வர்ஜீரிய மாநிலம், நோர்போக் நகரில் செயல்பட்டு வரும் தன்னார்வல அமைப்பாகும். இந்த அமைப்பு "விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும், சோதனைகள் நடத்தவும், மகிழ்ச்சி தரவும், எந்த விதத்திலும் துன்புறுத்தப்படுவதற்காகவும் உருவானவை இல்லை" என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பின் இந்திய அலுவலராக சச்சின் பங்கேறா என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பீட்டா என்றால் நினைவிற்கு வருவது மெரினாவில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த பீட்டா அமைப்பை தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விரட்டி அடித்தனர். தற்போது மீண்டும் தமிழகத்தில் பீட்டா அமைப்பு எட்டி பார்த்துள்ளது.
தற்போது நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கொரில்லா'. இந்த படத்தில் 'காங்' என்ற சிம்பான்சி குரங்கை நடிக்க வைத்துள்ளனர். இதற்காக 'கொரில்லா' படக்குழுவினர் தாய்லாந்து பறந்து சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பீட்டா அமைப்பை சேர்ந்த சச்சின் பங்கேறா என்பவர் இயக்குனர் டான் சாண்டியை உண்மையான சிம்பன்சி குரங்கை படத்தில் நடிக்க வைப்பதை தவிர்த்து ஹாலிவுட் படங்களில் பயன்படுத்துவது போல் சிஜிஐ தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் படங்களில் கொடுக்கப்பட்ட நேரங்களில் விலங்குகளை நடிக்க வைக்க விலங்கு வளர்ப்பவர்கள் அதனை அடித்து துன்புறுத்துவார்கள். இது போன்ற சினிமா, தொலைக்காட்சிகளில் நடிக்க வைப்பதற்காக பல விலங்குகள் அதன் குடும்பங்களிடமிருந்து பிரித்து கூண்டுக்குள் வளர்க்க படுகின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, விலங்குகளை கட்டுப்படுத்த முடியாக சூழலுக்கு தள்ளப்படுகிறது.
இதனை தவிர்க்க ஹாலிவுட்டில் ஜங்கிள் புக், பிளானட் ஆப் தி ஏப்ஸ் போன்ற பல படங்கள் சிறந்த தொழில்நுட்பத்தில் கிராபிக் காட்சிகளை கொண்டு படமாக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கொரில்லா படக்குழு சார்பில் அளித்த பதிலில் "நாங்கள் சிம்பன்சி குரங்கு சம்பந்தப்பட்ட அனைத்து படப்பிடிப்பையும் முடித்து விட்டோம். இதற்காக தாய்லாந்து அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, முறையான அனுமதி பெற்று தான் படப்பிடிப்பை துவங்கினோம். இதனை பீட்டா அமைப்பிடமும் தெரிவித்துள்ளோம்" என கூறியுள்ளது.
இந்த படம் இந்தியாவில் முதன் முதலாக சிம்பன்சி குரங்கை வைத்து எடுக்கப்படும் முதல் படம். இந்த படத்தில் ஜீவா, சாலினி பாண்டே சதீஸ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.