அசோக் செல்வனின் ஜாக் படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் பிரசாந்த்
வேலுசாமி (Author) Published Date : Sep 08, 2018 10:23 ISTபொழுதுபோக்கு
கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'புரூஸ் லீ' படத்தை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜ். இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கு வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு 'ஜாக்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு ராணுவ வீரனுக்கும் ராணுவ நாய்க்கும் இடையே இருக்கும் உறவுகளை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில் "இந்த படம் முழுவதும் வட இந்தியாவில் நடக்கும் பயணமாக இருக்கும். ராணுவ நாய்கள் பொதுவாகவே தனி திறமையை கொண்டிருக்கும். அதற்கேற்ப கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு கட்டுக்கோப்பாக இருக்கும். இந்த நாய்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்று விடும். இந்த படம் அப்படி பட்ட ஒரு ராணுவ நாயின் கதை.
இது ஒரு ராணுவ வீரனுடன் இணைந்து பல சாகசங்களை புரிகிறது. இந்த ராணுவ வீரனுக்கும், ராணுவ நாய்க்கும் இடையேயான உறவை காண்பிக்கும் விதமாக இந்த படம் அமையும். வட இந்தியாவில் நடக்கும் கதைக்களத்தை கொண்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அசோக் செல்வன் தீவிர உடற் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்திற்கு தற்போது கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு கோகுல் பெனோய் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இந்த படத்திற்கு சண்டை பயிற்சி அளிக்கிறார்.