செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கவிடாமல் என்னை தடுக்கிறார்கள்
வேலுசாமி (Author) Published Date : Feb 26, 2018 14:53 ISTபொழுதுபோக்கு
நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்' படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் அமையாததால் தோல்வியடைந்தது. இதற்கு நடிகர் சிம்பு மட்டுமே காரணம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் போனில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் சிம்பு, இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் என்னை நடிக்க விடாமல் தயாரிப்பாளர்கள் தடுக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நடிகர் சிம்பு அளித்த விளக்கத்தில் "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு நடிகர் சங்கம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலாக ஒரு நடிகனாக எனது விளக்கத்தை அளித்து விட்டேன். இதன் மூலம் நடிகர் சங்கம் என் மீது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால் அதை செய்யாமல் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நான் நடித்து கொண்டிருக்கும் போது போன் செய்து தொல்லை கொடுக்கிறார்கள்.
தயாரிப்பாளருக்கு சிம்புவை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று இடைஞல் தருகிறார்கள். 'ஏஏஏ' படம் வெளியான 6 மாதங்களுக்கு பிறகு என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இது யார் தூண்டுதலின் பேரில் நடக்கிறது என்று தெரியவில்லை. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் பிரகாசிராஜிடமும் பதில் அளித்துவிட்டேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு "தமிழர்களுக்கு பிரச்னை என்று அனைவரும் ஒன்றினையும் போது நானும் அரசியலுக்கு வருவேன். நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா வேணாமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.