கிங் ஆப் தாராவி - காலா திரைவிமர்சனம்
விக்னேஷ் (Author) Published Date : Jun 07, 2018 11:13 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் முதன் முறையாக ரஜினி, தனுஷ் கூட்டணியில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் 'காலா'. இந்த படத்தில் ரஜினி மும்பை தாராவியில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் கரிகாலனாக தனது கூட்டு குடும்பத்துடன் இணைந்து சந்தோசத்துடன் வாழ்ந்து வருகிறார். மற்ற படங்களில் இருப்பது போல அரசியல் வில்லனாக நானே பாடேகர் நடித்துள்ளார். மும்பையில் அரசியல் தலைவராகவும்,ரவுடி கூட்டத்திற்கு தலைவனாகும் இருக்கும் இவர் தாராவியில் எளிமை வாழ்க்கை நடத்தி வரும் மக்களை அங்கிருந்து விரட்டி அப்பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்ட நினைக்கிறார்.
இதற்காக நடிகர் சம்பத்ராஜுடன் இணைந்து அதற்கான வேளைகளில் ஈடுபடுகிறார். ஆனால் தனக்கென சிறு கூட்டணியை வைத்து கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் காலாவின் இளைய மகன், சம்பத்தை அடுக்குமாடி கட்டிடங்களை கட்ட விடாமல் அவரை தட்டி கேட்கிறார். இதனால் கைகலப்பு ஏற்பட கரிகாலனான ரஜினி அங்கு வந்து சம்பத்தின் அடியாட்களை அடித்து விரட்டிவிடுகிறார். இதனை அடுத்து வரும் எம்எல்ஏ தேர்தலில் நானே படேகர் மற்றும் சம்பத் ஆகியோரை ரஜினி தனது ஆளை நிற்கவைத்து தோற்கடிக்க இருவருக்கும் கலங்கம் ஏற்படுகிறது.
இதனால் கரிகாலனை கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். இந்த நிலையில் காலாவின் முன்னாள் காதலியான ஹேமா குரேஷி வெளிநாட்டில் இருந்து தாராவிக்கு வருகிறார். நானே படேகருடன் சேர்ந்து இவரும் அப்பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்ட நினைத்து ரஜினியிடம் ஆலோசனை சொல்கிறார். ஆனால் அதற்கு காலா எதிர்ப்பு தெரிவிக்க இறுதியில் நானே படேகர் மற்றும் ஹேமா குரேஷியின் திட்டங்களை ரஜினி எப்படி முறியடித்தார், ரஜினி அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றாரா, தனது மக்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் இயக்குனர் பா ரஞ்சித் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு முக்கிய அளிக்கும் விதமாக உருவாக்கியுள்ளார். இதனால் முன்னணி நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரஜினியின் சென்டிமென்டும், பன்ச் டையலாக்கும் படத்தில் சிறப்பு அம்சமாக உள்ளது. இது தவிர இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையும் பக்க பலமாக உள்ளது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் பா ரஞ்சித் தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வலியையும் தனது பாணியில் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். இந்த படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் 'காலா' தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம்.