'விசிறி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், பா.ஜ.க துணை தலைவர் மற்றும் ஆரி
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 23, 2017 13:47 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் வெற்றி மகாலிங்கம் 'வெண்ணிலா வீடு' படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானவர். இதனை அடுத்து தற்போது 'விசிறி' படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தில் அறிமுக நாயகர்கள் ராஜ் சூர்யா, ராம் சரவணா நடித்துள்ளனர். இந்த படத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் அரசகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சேகர் சாய்பரத், ராஜ மாணிக்கம், நவீன் சங்கர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் ஆரி, பா.ஜ.க மாநில துணை தலைவர் அரசகுமார், தயாரிப்பாளர் தனஞ்செயன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முதலில் பேசிய நடிகர் ஆரி, பா.ஜ.க மாநில துணை தலைவர் அரசகுமார் முன்னிலையில் கருத்து சுதந்திரத்தை பற்றி பேசினார். அதில் "தயவு செய்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்று இந்த மேடையில் ஒரு தமிழனாக கேட்டு கொள்கிறேன். சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர் இங்கு இருக்கிறார். இவரிடம் சொன்னால் பிரதமர் மோடியிடமே சொன்னது போலாகும். மேலும் நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வருவது உறுதி." என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பேசிய பா.ஜ.க தலைவர் அரசகுமார் " முதலில் நான் தம்பி ஆரி தெரிவித்த கருத்துக்கு பதில் சொல்லிவிடுகிறேன், மோடி அரசும் பாஜகவும் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதில்லை. நடிகர் விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவர் சொன்னால் விரைவில் மக்களை சென்றடையும், தம்பி விஜயால் ஒரு தவறான கருத்து செல்லக்கூடாது என்று தான் எதிர்ப்பு தெரிவித்தோம்." என்றார்.
அடுத்து பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் "அண்ணன் அரசகுமார் அவர்கள் ஒரு நடிகர் சொன்னால் விரைவில் சென்றடைவதாக தெரிவித்தார். இதற்கு பதிலாக நான் பல இடங்களில் தெரிவித்தேன். இந்த மேடையிலும் சொல்கிறேன், சினிமா வேறு அரசியல் வேறு சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்கள் போல இயல்பு வாழ்க்கையில் நடிகர்கள் நடப்பதில்லை.முந்தய அரசியல் வாதிகள் சினிமாவையும் அரசியலையும் பிரித்தறிகிற ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள், ஆனால் இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு அந்த பக்குவமும் ஆற்றலும் இல்லை. எப்போது ஏதாவது நடிகன் வந்துவிடுவானோ என்று பயந்து இருக்கிறார்கள்.
இந்த படம் விஜய் - அஜித் ரசிகர்களின் மோதலை மையப்படுத்தி எடுத்ததாக சொல்கிறார்கள். இந்த பிரச்சினை இப்போதில்லை எம்ஜிஆர் - சிவாஜி காலத்திற்கு முன்பே ஆரம்பித்த ஒன்று. ரசிகர்கள் எப்படி மோதிக்கொண்டாலும் நடிகர்கள் இயல்பு வாழ்க்கையில் நண்பர்களாக வாழ்கின்றனர். இதனை அறிந்து ரசிகர்கள் ஒன்று திரண்டால் அரசியல்வாதிகள் தலை தெறிக்க ஓடி விடுவார்கள். ஊழல்வாதிகளை ஒழித்து விடலாம் அதற்கு மெரினாவில் கூடிய இளைஞர் பட்டாளமே சான்று. இளைஞர்கள் காலம் வந்துவிட்டது. அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும். நாங்கள் ஒன்றே தேவன் ஒருவனே குளம் என்ற கோட்பாட்டில் வாழ்கிறவர்கள், தேவையில்லாமல் ஜாதி மதத்தை திணிக்கிறார்கள். பதிவிலிருக்கும் அரசியல்வாதிகள் ஜாதி மதம் பற்றி தெரிவிப்பது மோசமான செயல். மற்ற மாநிலங்களில் இருக்கும் சினிமாவை போன்று தமிழ் சினிமாவையும் வாழ விடுங்கள்." என்று தெரிவித்துள்ளார். பாஜக வின் மாநில துணை தலைவர் முன்னிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி பேசியுள்ளது அரங்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.