20 வருடங்களாக நீடித்த மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு
விக்னேஷ் (Author) Published Date : Apr 05, 2018 12:17 ISTபொழுதுபோக்கு
பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான சல்மான் கான், கடந்த 1998-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அரியவகை கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், படப்பிடிப்பில் இருந்த சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் ஆகியோரும் சிக்கினர். இந்த வழக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ராஜஸ்தான் நீதிமன்றம் விசாரித்து, அவர் வேட்டையாடியது குறித்து எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை குற்றவாளி இல்லை எனக்கூறி விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பிற்கு அனைவரும் ஆர்வமாக இருந்தனர். இதன் பிறகு இந்த வழக்கை விசாரித்து ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தேவ் குமார் தற்போது தீர்ப்பளித்துள்ளார்.
சல்மான் கான், "ஹாம் சாத் சாத் ஹே" என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது 1998, அக்டொபர் மாதம் 1-ஆம் தேதியில் "பிளாக் பக் (Black Buck)" என்ற அரியவகை இரண்டு மான்களை வேட்டையாடியதாக வன உயிரி பாதுகாப்பு சட்டம் 51-ன் கீழும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 149 கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்து, சாயிஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.