யு டர்ன் கன்னட பட ரீமேக்கில் நடிகை சமந்தா
ராதிகா (Author) Published Date : Jan 26, 2018 16:31 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பவன் குமார் எழுத்து, தயாரிப்பு, இயக்கத்தில் கடந்த 2016ல் கன்னட மொழியில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'யு டர்ன்'. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், தீலிப் ராஜ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பெண்ணை மையப்படுத்தி உருவாக்கிய இப்படத்தில் ஷ்ரத்தா 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில நாளிதழில் பயிற்சி நிருபராகப் பணியாற்றும் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவான பாராட்டு கிடைத்திருந்தது. மலையாள திரையுலகில் நல்ல வெற்றியை பெற்றதின் காரணத்தினால் இப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படத்தின் ரீமேக் முயற்சியில் 'சைத்தான்’ மற்றும் ‘சத்யா’ படங்களை இயக்கி நல்ல வெற்றியை பெற்ற இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்டு வருவதாக தகவல் வந்திருந்தது. மேலும் இப்படத்தில் நயன்தாராவை நடிக்கவைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்த தகவலை மறுத்து விட்டார். தற்பொழுது இப்படத்தின் ரீமேக் முயற்சியில் கன்னட படத்தினை இயக்கிய பவன் குமாரே ஈடுபட்டு வருகிறார். மேலும் இப்படத்தினை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
மேலும் இப்படத்தில் நாயகியாக சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்தி வெளிவந்திருந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா அவர்களது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்தில் துவங்கவிருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.