12 மணிநேர கதையாக உருவாகும் சமுத்திரக்கனியின் பற
வேலுசாமி (Author) Published Date : Jul 16, 2018 09:54 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது வட சென்னை, கிட்ணா, கொளஞ்சி, பேரன்பு, ஆண் தேவதை போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இது தவிர இவரது இயக்கத்தில் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக மும்முரமாக தயாராகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி அடுத்ததாக சமூகம் சார்ந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாக, அநீதிகளை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'பற' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மெர்லின், பச்சை என்கிற காத்து போன்ற படங்களை இயக்கிய கீரா என்பவர் இயக்கும் இந்த படத்தை வர்ணாலயா சினி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படம் குறித்து இயக்குனர் கீரா கூறுகையில் "இந்த படத்தில் கிராமத்தில் இருந்து வாழ்வதற்காக சிட்டி நோக்கி புறப்படும் காதலர்கள், வயதான காலத்தில் தனிமையில் இருந்து விடுபட விரும்பும் முதியோர்கள், குழந்தையை இழந்த வழக்கறிஞர், ஒரு கட்சி தலைவர், ஒரு டான்சர் போன்ற பல கதா மாந்தர்களின் வாழ்க்கையில் ஓர் இரவில், அதாவது 12 மணிநேரத்தில் நடக்கும் கதை.
இந்த கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, சாந்தினி, முனிஸ்காந்த், கம்பம் மீனா, சூப்பர் குட் சுப்ரமணி, பேராசிரியர் செல்வக்குமார், அஸ்மிதா, வின்னர் ரமச்சந்திரன், நிதிஷ் வீரா, முத்துராமன், சாஜீ மோன், வெண்பா, தீக்கதிர் குமரேசன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.