சிவகார்திகேயனுக்காக ஏலியன் கதையை உருவாக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமார்
வேலுசாமி (Author) Published Date : Feb 23, 2018 12:27 ISTபொழுதுபோக்கு
நடிகர் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் தற்போது வரும் படம் 'சீமராஜா'. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கும் புது படத்தில் நடிக்க உள்ளார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த 'இன்று நேற்று நாளை' படம் டைம் மிஷினை வைத்து அறிவியல் சார்ந்ததாக இருந்தது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ள இந்த படமும் அறிவியல் சார்ந்ததாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதன்படி தற்போது இந்த படமும் அறிவியல் சார்ந்ததாக உருவாக உள்ளது. இந்த படத்திற்காக கதையை முடிக்கவும், இந்த படம் சம்பந்தமான சில ஆராய்ச்சிகளுக்காகவும் ஒரு வருடம் செலவானதாக சமீபத்தில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த படம் டைம் மெசினை தாண்டி புது வித முயற்சியாக ஏலியனை மையமாக வைத்து உருவாக உள்ளது. ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வரும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், எப்படி அதை எதிர்க்க தயாராகிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்த படம் இந்தியாவிலே புதுவித முயற்சியாகும்.
தற்போது வரை ஏலியனையும், அறிவியல் சாகசத்தையும் அதிகமாக ஹாலிவுட் படத்தில் மட்டுமே ரசிகர்கள் கண்டனர். தற்போது வளர்ந்து வரும் நவீன உலகில் தமிழ் திரையுலகிலும் புது வித தொழில்நுட்பத்தை கையாண்டு இந்த படத்தை ஏலியன் சார்ந்ததாக உருவாக்க உள்ளனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அறிவியல் விஞ்ஞானியாக களமிறங்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
வேலைக்காரன், சீமராஜா போன்ற படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.