ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் ரசிகர் மன்றம்
வேலுசாமி (Author) Published Date : Feb 18, 2018 10:37 ISTபொழுதுபோக்கு
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு தற்போது டாகுமெண்ட்ரியாக தொடராக உருவாக்க உள்ளனர். இதனை பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் உருவாக்க உள்ளனர். இதற்காக நடிகை ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த ஆவண படத்தை ஐந்து பாகங்களாக எடுக்க உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்ளிட்ட அனைத்து மொழி நடிகர்களும் நடிகை ஸ்ரீதேவி பற்றி பாராட்டும் கருத்துக்கள் இதில் இடம்பெற உள்ளது. நடிகை ஸ்ரீதேவி படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினர் ஆகியோரது பேட்டியும் இதில் இடம்பெறுகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கை, சாதனைகள், வாங்கிய விருதுகள் மற்றும் குடும்பம் உள்ளிட்ட பல சம்பவங்கள் இதில் இடம்பெறுகிறது. தனது 4 வயதிலேயே ஸ்ரீதேவி இயக்குனர் எம்ஏ திருமுகம் இயக்கிய 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கதாநாயகியாக அறிமுகமானார். முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறைஉள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்திபட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.