இயக்குனர் சுசீந்திரன் நடிக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு முதல் நாள் படப்பிடிப்பு
வேலுசாமி (Author) Published Date : Jan 30, 2018 10:03 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர்கள் மிஸ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் இயக்குனர் சுசீந்திரன் நடிப்பில் உருவாகும் முதல் படமாகும். நேற்று நடந்த முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்று (29-01-2018) நாளில் தான் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' படம் வெளியானது. கபடி போட்டியை மையமாக கொண்ட இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இது குறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது டிவிட்டரில் "என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் இது. என்னுடைய முதல் திரைப்படம் ஜனவரி 29-இல் ரிலீஸ் ஆனது. இன்றுடன் 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இன்று மீண்டும் ஒரு பயணம் ஜனவரி 29..
ஒரு நடிகனாக என்னுடைய முதல் படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' ஆரம்பம். இயக்குனர் ராம்பிரகாஷ் அவர்களுக்கும் தயாரிப்பாளர் மோகன் சார் அவர்களுக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்திற்கு பிறகு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் பிகே ராம் மோகன் கல்பதகுரு பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படம் குற்றச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் மற்றும் இயக்குனர் மிஸ்கின் ஆகியோர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ஊழியர்களாக பணி புரிகின்றனர். அப்போது ஒரு குற்ற சம்பவம் நடக்கிறது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக இயக்குனர் மிஸ்கின் களமிறங்கியுள்ளார். என்ன சம்பவம்? எப்படி குற்றத்தை கண்டுபிடிக்கின்றனர்? என்பதே படத்தின் கதை.