திரையரங்குகளில் எத்தனை காட்சிகள் மற்றும் எந்த வகை படங்கள் திரையிடப்படும்
ராசு (Author) Published Date : Mar 23, 2018 10:19 ISTபொழுதுபோக்கு
தமிழக அரசுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு கிடைத்ததால், திரையரங்கு உரிமையாளர்கள் வெள்ளிகிழமை (இன்று) முதல் திரையரங்குகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். திரையரங்குகளில் திரையிடுவதற்கு புதிய தமிழ் படங்கள் இல்லை என்றாலும் தங்களிடம் இருக்கும் திரைப்படங்களையும், சமீபத்தில் திரையரங்குகள் கிடைக்காமல் வெளியேறிய படங்களையும், மற்ற மொழி படங்களையும் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கும் டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் போராட்டம் நடப்பதால், அதையும் விரைவில் முடிவுக்கு கொண்டுவர தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடமும் வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 16-ஆம் தேதிக்கு முன்பும் எந்த புதிய திரைப்படங்களும் இல்லாததால், பழைய படங்களை திரையிட்டு வந்தனர், இதற்கு போதுமான ஆதரவு மக்களிடம் கிடைக்கவில்லை.
காலை மற்றும் மதிய காட்சிகள் பெரும்பாலான திரையரங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டன, காரணம் ஒவ்வொரு காட்சிக்கும் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே திரைப்படத்தை காண வந்தனர். இரவு கட்சிகளுக்கும் இதே நிலைதான். இப்படி இருக்கும் நிலையில் திரையரங்குகள் எவ்வாறு இயங்கும்?.எப்படி அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்?
சில சமயங்களில் புதிய திரைப்படத்திற்கே கூட்டம் வராத நிலையில் தற்போது பழைய பிற மொழி படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்கிறார்கள், இந்த திரைப்படங்களை யாரும் பார்க்க முன்வருவதும் இல்லை. தமிழில் மொழி பெயர்த்து வரும் ஆங்கில திரைப்படங்களுக்கு ஓரளவு மட்டுமே வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த மார்ச் 16ஆம் தேதிக்கு முன்பு வெளிவந்த பழைய தமிழ் திரைப்படங்களில் மேயாத மான், அவள், மெர்சல் போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
இந்நிலையில் தற்போது பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடப்பதால், கூட்டம் வருவது கடினமே. இதனால் எந்த திரைப்படத்தை திரையிட்டால் அன்றாட செலவிற்கு போதுமான வருமானம் வரும் என்பதை முடிவு செய்தே திரையரங்குகள் இயங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.