தானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு
வேலுசாமி (Author) Published Date : Jan 05, 2018 16:39 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வரும் பொங்கலுக்கு வரவுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு உரையாடினார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா "முதலில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். சினிமா துறையில் இருந்து அடுத்த பயணத்தை துவங்க இருக்கும் கமல் சார், ரஜினி சார், விஷால் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர்களுக்கு உங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. எனது ஒவ்வொரு படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்கு முக்கியம். இது வரை எனது நடிப்பில் 35 படங்கள் வெளியாகி அதில் நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்லலாம். என்னுடன் பணியாற்றிய கலைஞர்களுள் ஞானவேல் ராஜா நல்ல ஆதரவாக இருந்தார்.
இந்த படம் 1987-இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இதனை மையமாக வைத்து தான் 2013-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பெஷல்ஸ் 26' படம் உருவானது. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை நாளில் எனது படம் வெளிவருவதில் மகிழ்ச்சி. பொதுவாக அனைத்து படங்களில் வரும் புகைபிடிக்காதீர், மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு மற்றும் டிஸ்க்ளைமர் (Disclaimer) போன்றவை இந்த படத்தில் வராது. அப்படி ஒரு படமாக உருவாகியுள்ளது. இதனை சென்சார் அதிகாரிகளும் பாராட்டினர். " என்று தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசிய போது "இந்த படம் சிறப்பாக உருவானதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் முக்கிய காரணம். இந்த படத்தின் கதையை 'ஸ்பெஷல்ஸ் 26' படத்தின் உரிமையை வாங்கி அதிலிருந்து முக்கிய கருவை மட்டும் எடுத்து உருவாக்கியுள்ளேன். முதலில் உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. இந்த படத்தில் சூர்யாவுக்கு புதுவிதமான லுக்கை தந்துள்ளேன். இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் பிரதர் என்று சொல்லிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம், பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறீர்கள்.
ரம்யா கிருஷ்ணன் கமல் மாதிரி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவர். இவரை பொம்பள கமல் ஹாசன் என்றே சொல்லலாம். அடுத்து தம்பி ராமையா இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரை ஆம்பள மனோரமா என்றே சொல்லலாம். அடுத்து இசையமைப்பாளர் அனிருத் இந்த படம் சிறப்பாக அமைந்ததற்கு ஒரு முக்கிய பலம். அவருடைய இசை இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா "இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பை முழுமையாக கொடுக்க முடியவில்லை. அதனை பொறுத்துக்கொண்ட சூர்யா மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் ரிமேக் என்று சொல்கின்றனர். ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு காட்சியை மட்டும் வைத்து இந்த படத்தை சிறப்பாக உருவாகியுள்ளோம். ஒரு நேரடி தமிழ் படத்திற்கு எவ்வளவு உழைப்பு தேவையோ அதைவிட பலமடங்கு இந்த படத்திற்கு விக்கி அளித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவை 'அயன்' படத்தில் வருவதுபோல் மாறுபட்ட தோற்றத்தில் காணலாம். " என்று தெரிவித்துள்ளார்