தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்
விக்னேஷ் (Author) Published Date : Mar 30, 2018 17:53 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை சமீபத்தில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 5 கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த கோரிக்கைகளை தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது விஷால் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் "தியேட்டர் கட்டணத்தால் பட தயாரிப்பாளர்களுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை, இதனால் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்போம். மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். பொது மக்களின் வசதிக்காகவும், சினிமா துறையை ஒழுங்குபடுத்தவும் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் புதன் கிழமை அன்று தயாரிப்பாளர்கள் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தி முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே செல்வமணி, டிக்கெட் கட்டணம் ஏழை மக்களும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அரசு, திரையரங்குகளின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.