'நெஞ்சில் துணிவிருந்தால்' சமூகத்திற்கு ஒரு செய்தி - கவிஞர் வைரமுத்து
ராதிகா (Author) Published Date : Nov 08, 2017 11:29 ISTபொழுதுபோக்கு
கவிஞர் வைரமுத்து நாளை வெளிவரபோகும் நெஞ்சில் துணிவிருதால் படத்தை பற்றியும் அதை இயக்கிய சுசீந்திரனை பற்றியும் மிகவும் புகழ்ந்துள்ளார்.
"'நெஞ்சில் துணிவிருந்தால்' இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த வெற்றி படைப்பு. இவர் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி, ஒரு கலையாளி. தன படைப்புக்குள் ஒரு உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்புதான் இயக்குனர் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை. அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப் படைப்பான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் வெளிவருகிறது. இந்த படைப்பு சமூகத்திற்க்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக இருக்கும். தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும். இந்த மையத்தை வைத்து இந்த படைப்பு இயங்குகிறது.
அரசியல், கலை, சமூகம், அரசாங்கம், கல்வி, நீதி, மருத்துவம் எல்லா துறைகளிலும் தகுதிமிக்கவர்கள் தகுதி மிக்க இடத்தை அடைய வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை உள்ளடக்கமாக கொண்டு இந்த படம் இயங்குகிறது. இதில் நானும் பாடல் எழுதியிருப்பது எனக்கு கிடைத்த பெருமையாகும். சுசீந்திரன் படங்களில் எனக்கு எப்பொழுதுமே ஒரு சுதந்திரம் தருவார். எழுதி கொடுத்து இசையமைக்கலாமே என்று அவர் புன்னகையோடு கேட்கின்ற போது நான் மகிழ்ந்து போவேன். அப்படி எழுதி கொடுத்து இமான் இசையமைத்து ஒரு பாடல் இந்த படத்தில் உள்ளது அது அனைவராலும் முணுமுணுக்கப்படும் என நம்புகிறேன்.
அறம் என்பது என்ன தர்மம் செய்வது மட்டுமே அறமா, அன்னமிடுவது மட்டுமே அறமா, அள்ளித் தருவது மட்டுமே அறமா இல்லை அறத்தின் எல்லைகளை இந்த படம் விரிவு செய்கிறது. அதை என் வரி உறுதி செய்கிறது. எண்ணம் அறிந்து ஏழை பசிக்கு அன்னமிடுவது அறமாகும். இந்த சமூகம் எப்போது யுத்தத்தில் இருக்கிறதோ அப்போது கொலையும் கூட அறமாகிவிடுகிறது என்ற கீதையின் கருத்தையும், யுத்த தர்மத்தையும் இந்த படம் முன்னிலைப்படுத்துகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் எல்லாம் இந்த படத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கின்றார்கள். சுசீந்திரன் தொட்டதெல்லாம் வெற்றிப்படம்தான். இந்த படம் வெற்றியின் இன்னொரு உயரத்தை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." - கவிஞர் வைரமுத்து