இசை வெளியீட்டிற்கு முன்பே சர்கார் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்
புருசோத்தமன் (Author) Published Date : Oct 02, 2018 11:42 ISTபொழுதுபோக்கு
திரைப்பட தயாரிப்பாளர்களை நீண்ட வருடங்களாக அச்சுறுத்தி வரும் திருட்டு இணையத்தளங்களுள் ஒன்றான தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் இன்று திடீரென புது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் வந்ததில் இருந்து நிறைய மக்கள் தியேட்டருக்கு செல்வதையே மறந்து வீட்டில் அமர்ந்து கொண்டே இன்று வெளியாகியுள்ள படத்தையும் சுலபமாக டவுன்லோட் செய்து பார்த்து ரசிக்கின்றனர். இதற்கு ஜியோ ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
இப்படி தியேட்டர்களுக்கு செல்லாமல் திருட்டு இணையதளங்கள் மூலம் வெளிவரும் படங்களை மக்கள் பார்ப்பதால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. வெளிவரும் படங்களை மட்டுமல்லாமல் விரைவில் வெளியாகக்கூடிய படங்களின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் போன்றவற்றையும் திருட்டு தனமாக வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஏஆர் முருகதாஸின் 'சர்கார்' படமும் சிக்கியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை காந்தி ஜெயந்தியான இன்று நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் இசையை வெளியிடுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே அனைத்து பாடல்களையும் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இது போன்ற செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், தொடர்ந்து திருட்டு இணையதளங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட படக்குழுவினருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றனர்.