கரிகாலன் படத்தை கைவிட்டது ஏன்?
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 30, 2017 18:20 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் எல்.ஐ.கண்ணன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘கரிகாலன்’. அரசர் காலத்து விக்ரம் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படத்தின் கதையைக் கேட்டு மிகவும் பிடித்துவிடவே ஒப்பந்தம் செய்துள்ளார் விக்ரம். முதலில் போட்டோ ஷூட் நடந்துள்ளது. இதனை அடுத்து காட்சிகள் எப்படி வரும் என்று புகைப்படத்தை வைத்துப் பணிபுரிந்து காட்டும்போது விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டது. முதல் கட்டமாக 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். முழுக்க முழுக்க பச்சை வண்ண பின்னணியைக் கொண்டே மொத்த படப்பிடிப்பும் நடத்தினார்கள்.
அப்போது, தொடர்ச்சியாக க்ரீன் மேட் பின்னணியிலே பணிபுரிந்து வருகிறோம், இரண்டு நிமிடக் காட்சிகளை மட்டும் எப்படி வரும் என்று காட்டினால் தொடர்ந்து நடிக்கச் சிறப்பாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார் விக்ரம். சில நாட்களுக்குப் பிறகு சில விநாடி காட்சிகளை மட்டும் காட்டியுள்ளனர். இதற்கே இவ்வளவு காலமா, ஒட்டுமொத்த படத்துக்கும் வருடக்கணக்கு ஆகுமே என்று விக்ரம் தெரிவித்துள்ளார். ஏனென்றால் முழுக்க பிரபல ஹாலிவுட் படமான ‘300 ஸ்பார்டன்ஸ்’ படப் பாணியில் உருவாக்க முடிவு செய்துள்ளது படக்குழு. “160 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, அதனை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டு தயாரிப்பாளருக்கு லாபம் கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகத் தெரிகிறது. ஆகையால், படத்தைக் கைவிடுவதே சரி” என்று விக்ரம் கூறியவுடன், ‘கரிகாலன்’ படக்குழு படத்தைக் கைவிட்டிருக்கிறது.