மெரினாவில் கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி
மோகன்ராஜ் (Author) Published Date : Aug 08, 2018 12:02 ISTPolitics News
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினா கடற்கரையில் நினைவிடம் ஒதுக்க சட்ட சிக்கல்கள் உள்ளது. இதனால் காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்திருந்தார்.
திமுக சார்பில் அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் முறையிடப்பட்டது. தற்போது இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சட்ட அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் பல கேள்விகளை முன்வைத்தனர். காமராஜருக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம் கோரவில்லை என்றும், ஜானகியம்மாள் இறந்தபோதும் முறையான அனுமதி கோரப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இருந்தாலும் பல்வேறு காரணங்களை கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கூடாது என தொடர்ந்து வாதம் செய்தார். திமுக தரப்பும் எதிர்வாதம் செய்து வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவு வந்த பிறகு மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இரண்டு ஜேசிபி வண்டிகள் குழி தோண்டுவதற்காக வரவழைக்கப்பட்டுள்ளது.