தினகரனுக்கே குக்கர் சின்னம் டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வேலுசாமி (Author) Published Date : Mar 09, 2018 11:26 ISTPolitics News
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி, இரு காட்சிகளாக பிரிந்து தற்காலிகமாக அதற்கு கட்சி பெயர்கள் கொடுக்கப்பட்டது. இதன் பிறகு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் இணைந்ததால் இந்த கூட்டணியே உண்மையான அதிமுக என அறிவித்து இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்திற்கு போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு கட்சியும் சின்னமும் கிடைக்காமல் போனது.
இதனை அடுத்து நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக தனித்து நின்று குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்த போதிலும் 89,063 வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தார். இந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜகவுக்கு நோட்டாவை விட குறைவான வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.
இதனால் இரு அணிகளாக பிரிந்த போது சசிகலா அணிக்கு கொடுக்கப்பட்ட அதிமுக அம்மா அணி என்ற பெயரையும் குக்கர் சின்னத்தையும் அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு டெல்லி உயர்நீதி மன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் குக்கர் சின்னத்தையும், தினகரன் பரிந்துரைத்த மூன்று கட்சி பெயர்களில் ஒன்றை அவருக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.