முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - அரசியல் பிரமுகர்கள் இரங்கல்
வேலுசாமி (Author) Published Date : Aug 16, 2018 18:13 ISTPolitics News
சுதந்திர இந்தியாவின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய், எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து 9 வாரங்களாக உயிருக்காக போராடி வந்த நிலையில் இன்று மாலை சரியாக 5:05 மணியளவில் உயிர் புரிந்துள்ளார். இவருடைய மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் முதல் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
93 வயதான இவர் இந்திய பிரதமராக 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இவருடைய மறைவினால் இந்தியா ஒரு வல்லமையான எழுத்தாளரை, அரசியல் தலைவரை, கதாசிரியரை இழந்துள்ளது. இவருடைய மறைவிற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.