காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி
புருசோத்தமன் (Author) Published Date : Dec 16, 2017 20:54 ISTPolitics News
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 1998-ஆம் ஆண்டு பதவியேற்று சுமார் 19 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை தலைமை தாங்கினார். தற்போது இவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி பணிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் புது தலைவர் பதவிக்கு கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் புது தலைவராக போட்டியின்றி ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார்.
இதற்கான சான்றிதழ் 16-ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் 87 வது தலைவராக பொறுப்பேற்றார். மேலும் ஜவஹர்லால் நேருவின் பரம்பரையில் 6 வது தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் புது தலைவராக ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொறுப்பேற்ற பின் பேசிய ராகுல் காந்தி "இன்று பதவியில் இருப்பவர்கள் மக்களுக்காக சேவை செய்யவில்லை. மக்கள் அவர்களுக்கு சேவை செய்யவேண்டியுள்ளது. இன்று பதவியில் இருப்பவர்கள் இந்தியாவை பின் நோக்கி அழைத்து செல்கின்றனர்.
மக்களுடைய அடிப்படை உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்படுகிறது. சில காலங்களாக காங்கிரஸ் மீது தாக்குதல் நடக்கிறது ஆனால் இதை கண்டு காங்கிரஸ் அச்சப்படாது. இன்றுள்ள ஆட்சியாளர்கள் தங்களது செல்வாக்கினால் வெற்றி அடைகின்றனர். மக்களுக்காக இதுவரை எந்த நன்மையும் செய்திவிட வில்லை. ஆனால் காங்கிரஸ் மக்கள் குரலாக ஒழிக்கும். பா.ஜ.க வுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களும் எங்களுடைய சகோதரர்கள் போன்றுதான் கருதுகிறோம். எங்கள் கட்சி பாரம்பரியமாக செயல்பட்டது. தற்போது இளமையாக மாறியுள்ளது. நாங்கள் இளைஞர்களுக்கு மாற்றங்களை நிகழ்த்து அழைப்பு விடுக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.