அரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி சொல்கிறேன் - ரஜினிகாந்த்
யசோதா (Author) Published Date : Dec 26, 2017 10:45 ISTPolitics News
நடிகர் ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்துள்ளார். முதல் கட்டமாக கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு முறையும் ரசிகர்களை சந்திக்கும்போது தன்னை திரையுலகில் பிரபலமாக்கிய இயக்குனர்களை வரவழைத்து பேச வைப்பார். முன்னதாக இயக்குனர் முத்துராமனை அழைத்து வந்தார். தற்போது இரண்டாம் கட்ட சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மகேந்திரன், கதாசிரியர் கலைஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ரசிகர்கள் சந்திப்பு 31-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
ஒவ்வொரு நாளும் 1000 ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். இந்த ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் "திரையுலகில் என்னை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர் அவர்கள். நடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன், ஆனால் ஹீரோவாக நடிக்க ஆசைப்படவில்லை பின்னர் கலைஞானம் ஐயா தான் என்னை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். அதன் பிறகு 'ஆடு புலி ஆட்டம்' படத்தில் இயக்குனர் மகேந்திரன் சார் அறிமுகமானார். பிறந்த நாளன்று கடந்த 30 வருடங்களாக நான் யாரையும் சந்திப்பதில்லை.
வீட்டிலும் இல்லாமல் தனிமையில் இருக்க நினைப்பவன். இந்த முறை வழக்கத்திற்கும் மாறாக ஏராளமான ரசிகர்கள் வந்ததை அறிந்தேன், உங்களுடன் இல்லாமல் போனதற்கு மிகவும் வருத்தப்பட்டேன், இந்த ஆறு நாட்களில் சந்திப்போம். அரசியல் முடிவை பற்றி அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். மக்கள் நினைக்கிறார்களோ இல்லையோ ஊடகங்கள் பெரிதும் விரும்புகிறது. நான் அரசியலுக்கு எப்போது வருவேன் என்று கேள்வி எழுப்புகிறது. நான் அரசியலுக்கு 1996லேயே வந்துவிட்டேன். போர் வரும் என்று சொன்னேனே அந்த போர் தான் தேர்தல், தேர்தலில் வெற்றியடைய விவேகம் மட்டும் இருந்தால் போதாது, வியூகமும் வேண்டும். கஷ்ட நஷ்டங்கள் அனைத்தையும் கண்ட பிறகுதான் எதுவுமே தெளிவாக சொல்ல முடியும்.
என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி சொல்கிறேன். இன்றைய உலகில் சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் நல்லவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், தவறான செய்திகளை ஏற்காதீர்கள். 31-ஆம் தேதி அரசியல் நிலைப்பாட்டை சொல்கிறேன் என்று தான் கூறியிருக்கிறேன், அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை." என்று தெரிவித்துள்ளார்.