மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி
வேலுசாமி (Author) Published Date : May 28, 2018 11:15 ISTSports News
நாடே ஆவலுடன் காத்து கொண்டிருந்த இந்த ஆண்டின் ஐபிஎல் 2018 இறுதி போட்டி நேற்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடந்து முடிந்தது. இதில் சென்னை அணி ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2010, 2011 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக கோப்பையை தட்டி சென்றது. சென்னை அணியின் கேப்டன் தோனியின் தலைமையில் மூன்றாவது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் தற்போது சென்னை அணி மற்றும் தோனி ரசிகர்கள் சார்பில் தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த போட்டியில் 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்திருந்த ஐதராபாத் அணியை 18.3 ஓவரிலே 181 ரன்கள் எடுத்து தோற்கடித்தது. இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக சேன் வாட்சனின் அதிரடி ஆட்டம் காரணமாக இருந்தது.
இவர் 57 பந்துகளில் 117 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடினார். இவரை அவுட் ஆக்க முடியாமல் ஐதராபாத் பவுலர்கள் திணறினர். இவர் சந்தித்த 57 பந்துகளில் 11 பவுண்டரிகளையும், 8 சிக்ஸரையும் விளாசியுள்ளார். இந்த வெற்றியை சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்துடன் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். முன்பு வரை நடந்த 10 ஐபிஎல் சீசனில் மும்பை அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும், ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் டெக்கான் சார்ஜ்ஸ் அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது.
இதன் பிறகு இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசன் மூலம் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் வெற்றியை சமன் செய்துள்ளது. ஆனால் மும்பை 11சீசனில் 3 முறையும், சென்னை அணி 9 சீசனில் விளையாடி மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் விளையாட முடியாமல் இருந்த சென்னை அணி மீண்டும் இந்த ஆண்டு களமிறங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு போட்டியிலும் திருப்தி படுத்தி இறுதி போட்டியிலும் கோப்பையை வென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அணியின் வெற்றிக்கு ஏராளமான ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகியோரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வாட்சனை பாராட்டியுள்ளனர். இதுவரை நடந்த ஐபிஎல்லில் அதிகப்படியான சிக்ஸர்கள் பட்டியலில் கிரிஸ் கெயில் (292) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் டீ வில்லியர்ஸ் (186), மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில தோனி (186) மற்றும் ரெய்னா (185) ஆகியோர் உள்ளனர். இந்த பட்டியலில் வாட்சன் 157 சிக்ஸர்கள் அடித்து 8வது இடத்தில் உள்ளார்.
மேலும் இந்த போட்டியின் மூலம் வாட்சன் இதுவரை 4 சதங்களை கடந்து அதிக சதம் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பவுலர் ஹர்பஜன் சிங் இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ரன் கொடுக்காத பந்துகள் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னா அதிகப்படியான ரன்கள் என்ற பட்டியலில் 4985 ரன்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சென்னை அணியின் இந்த அபார வெற்றியை கொண்டாட இன்று சென்னை அணி சொந்த மண்ணான சென்னைக்கு வருகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் பலத்த ஆரவாரமுடம் சென்னை அணிக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.