இந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி
வேலுசாமி (Author) Published Date : Jun 15, 2018 18:25 ISTSports News
தற்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் நடந்து முடிந்துள்ளது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். பிறகு முரளி விஜய் 105 ரன்களிலும், ஷிகர் தவான் 107 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பிறகு களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் புஜாரா ஆகியோர் நிதானமாக ஆடினர். இதில் கேஎல் ராகுல் 54 ரன்களிலும், புஜாரா 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு அணியின் கேப்டன் ரஹானா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஹர்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர அஸ்வின் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடி 71 ரன்களில் உள்ளபோது ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய வீரர்களும் குறைவான ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி மொத்தமாக 105 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 474 ரன்களை குவித்திருந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்க்ஸை ஆடியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முஹம்மத் ஷாசாத் மற்றும் அஹ்மதி ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 28 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் முஹம்மத் ஷாசாத் மற்றும் அஹ்மதி ஆகியோர் 13 ரன்கள் மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் அதிகபட்சமாக ஷாஹிடி மற்றும் அஸ்கர் ஸ்டானிக்ஸை ஆகியோர் 36 மற்றும் 25 ரன்கள் எடுத்திருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக ஆப்கானிஸ்தான் அணி 38 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரஹானா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.