ஜிமெயிலில் செயற்கை நுண்ணறிவு மின்னஞ்சல் வசதி அறிமுகம்
வேலுசாமி (Author) Published Date : May 09, 2018 13:00 ISTTechnology News
கூகுளின் செயலிகளில் மக்களுக்கு மிகவும் முக்கியமான அம்சம் ஜிமெயில். ஆன்லைனில் இயங்கக்கூடிய வகையில் கடந்த 2004இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜிமெயில் 14வருடங்களாக மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த ஜிமெயில் தற்போது உலகம் முழுவதும் 1.4 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் சேவை சமீபத்தில் புதிய அம்சங்களை கொண்டு அப்டேட் செய்யப்பட்டது. இதன் பிறகு விரைவில் ஸ்மார்ட் காம்போஸ் எனப்படும் புது அப்டேட்டை செயல்படுத்த உள்ளனர்.
இந்த அப்டேட் மூலம் ஜிமெயிலில் இனி மெயில் அனுப்பும் போது நாம் டைப் செய்யவுள்ள வார்த்தைகளை அதுவாகவே ஆராய்ந்து உங்களுக்கு திரையில் காண்பிக்கும். அதனை தேர்வு செய்ய TAB என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும். இந்த வசதி மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்டு மின்னஞ்சல்களை மதிப்பிடும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த அறிவிப்பை கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை நேற்று நடந்த கூகுள் (Google I/O 2018) நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார்.
இது தவிர இந்த நிகழ்ச்சியில் கூகுளின் செயலிகளான கூகுள் அசிஸ்டன்ட், யூடியூப், கூகுள் மேப், கூகுள் நியூஸ், கூகுள் போட்டோஸ் போன்றவற்றிலும் பல அம்சங்களை அப்டேட் செய்யவுள்ளனர். இதில் கூகுள் அசிஸ்டன்ட் எனப்படும் செயலியின் மூலம் பயனாளர்கள் தங்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்களை கூகுள் அசிஸ்டன்ட் மூலம் அந்தந்த மொழிகளில் தெரிவிக்கலாம். இந்த கூகுள் அசிஸ்டன்ட் 6 மாறுபட்ட மொழிகளில் பேசக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுள் போட்டோஸ் செயலியில் AI எனப்படும் (Artificial Intelligence) முறையை அறிமுகப்படுத்த உள்ளனர். இதன் மூலம் தாமாக பல வகையான புகைப்படங்களை உங்களுக்கு காண்பிக்கும். மேலும் இதில் கருப்பு வெள்ளை புகைப்படங்கள்(B&W photo Colorization), பிரகாசத்தை அதிகரிப்பது, வேறு கோணத்தில் பெறுவது(Brightness Correction and Suggested Rotations) போன்றவையும் செயல்படுத்த உள்ளனர். மேலும் யூடியூப் காணப்படும் திரையை ஸ்மார்ட் டிஸ்பிளே எனப்படும் முறையில் சிறப்பானதாக வடிவமைக்க உள்ளனர்.