நிலநடுக்கத்தால் 135 பேர் பலி - ஈரான் மற்றும் ஈராக்
புருசோத்தமன் (Author) Published Date : Nov 13, 2017 10:00 ISTWorld News
ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில், ஈரான் பகுதிக்குட்பட்ட கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் ஒன்று திரண்டனர். இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக மீட்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதிகள் குலுங்கின. ஈரானில் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மீட்புக்குழு விரைந்து வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 135 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. ஏராளமான மக்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று மீட்புக்குழு தெரிவித்துள்ளது.