இணை பிரியாத நண்பர்களும் இணைய துடிக்கும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை
வேலுசாமி (Author) Published Date : Aug 05, 2018 11:06 ISTWorld News
இன்று சர்வதேச அளவில் நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1935ஆம் ஆண்டு முதல் 83 வருடங்களாக ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்று கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராது தங்களது அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். நண்பர்களாக பழகி வருபவர்கள் தாங்கள் சிறு வயது முதல் செய்த குறும்புகளை நினைவு கூறும் நாள் இது.
இன்றைய நாளில் நண்பர்கள் மீது இருக்கும் கோபம், போட்டி, பொறாமை இவற்றையெல்லாம் மறந்து மீண்டும் தங்களது பழக்கத்தை புதுப்பிக்கும் தருணம் இது. பணத்தை தேடி கடிவாளம் கட்டிய குதிரை போல் ஓடி கொண்டிருக்கும் இன்றைய உலகத்தில் நண்பர்களிடமும் பணம், வசதி போன்றவற்றை பார்க்கிற கேவலமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம் என்று சொல்வார்கள், இதனை புரிந்து நண்பர்களிடத்தில் பணம், வசதியை பாராது வாழ வேண்டும். பெற்றோர், மனைவிடம் கூற முடியாத குறைகளையும், இரகசியங்களையும் தன்னுடைய நண்பனிடத்தில் தெரிவிக்கலாம். பெரும்பாலும் இளமை பருவத்தில் தான் நண்பன் என்ற இன்பம் அதிகமாக கிடைக்கும். பள்ளி கல்லூரியில் எவன் ஒருவனுக்கு நல்ல நண்பன் கிடைக்கிறானோ அவன் பிற்காலத்தில் சாதனையாளராக மாறுகிறான்.
பெரும்பாலான சாதனையாளர்கள் வாழ்க்கைக்கு நண்பர்கள் தான் உறுதுணையாக இருந்துள்ளனர். தன்னுடைய நண்பன் என்ன தவறு செய்தாலும் நீ என் 'நண்பன்டா' என்று அனுசரித்து போகும் பழக்கம் நண்பனிடத்தில் மட்டும் தான் கிடைக்கும். இத்தகைய பழக்கத்தை தன்னுடைய காரியம் நிறைவேறுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல் தங்களுடைய வாழ்க்கை முழுவதும் பயணிக்கும் நண்பனாக்கி கொள்ளுங்கள். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.