இன்று சர்வதேச அளவில் தாய்மொழி தினம்
வேலுசாமி (Author) Published Date : Feb 21, 2018 18:02 ISTWorld News
இன்று சர்வதேச தாய்மொழி அல்லது பன்னாட்டு தாய்மொழி நாள் (International Mother Language Day) ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிரிழந்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்த நாள் சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூறும் வகையில் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்பின் ஆதரவு காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) அமைப்பாளர் கடந்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி நடந்த பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்த நாளை உலக அளவில் தாய்மொழிநாளாக அறிவித்தது.
பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யூனஸ்க்கோ அறிவித்தது. 2000-ஆம் ஆண்டு முதல் இந்த நாளை தாய்மொழி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யூனஸ்க்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.