மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட ஏர்டெல் நிறுவனம்
யசோதா (Author) Published Date : Dec 20, 2017 11:34 ISTBusiness News
ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி மற்றும் ஏர்டெல் நிறுவனம் இணைந்து ஏர்டெல் சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மின்னணு ஆதார் சரிபார்ப்பு முறையினை தவறாக உபயோகித்து பயனர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் பெயரில் ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி கணக்கை திறந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த வங்கி கணக்கை வைத்து ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி, எல்பிஜி மானியம் பெறுவதற்கான தேர்வாக அதனை மாற்றியுள்ளனர். சென்ற வாரத்தில் இந்திய தனிநபர் அடையாள ஆணையமானது ஏர்டெல் மொபைல் செயலியை மறு ஆய்வு செய்த போது ஏர்டெல் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் பல லட்சம் பயனாளர்கள் தங்களது மானிய தொகை அவர்களது ஏர்டெல் வங்கி கணக்கில் இருப்பதே தெரியாமல் இருந்துள்ளனர். இதனை அடுத்து ஏர்டெல் பேமன்ட்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளரின் மின்னணு ஆதார் சரிபார்ப்பு சேவைக்கு இடைக்கால தடை விதித்த பிறகு செய்த தவறை ஏர்டெல் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதுமட்டுமல்லாமல் தங்களிடம் உள்ள 190 கோடி ரூபாய் மானிய தொகையினை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் திருப்பி செலுத்துவதாக ஒப்புதல் அளித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் 31 லட்சம் வாடிக்கையாளர்கள் இது போன்று சிக்கியுள்ளனர். நீங்களும் உங்களது எல்பிஜி மானியம் மாற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.