இன்று கணித மேதை ராமானுஜர் பிறந்த நாள்
விக்னேஷ் (Author) Published Date : Dec 22, 2017 12:45 ISTஇந்தியா
இந்தியாவின் கணித மேதை என்று அழைக்கப்படும் இராமானுஜர், சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் குடந்தை சாரங்கபாணி தெருவில் 1887-ஆம் ஆண்டு ஈரோட்டில் டிசம்பர் 22-இல் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள், இராமானுஜருக்கு அடுத்து பிறந்த மூன்று குழந்தைகளும் பிறந்த ஓரிரு ஆண்டுகளில் உயிரிழந்தனர். இராமானுஜர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேச்சுத்திறன் இல்லாமல் இருந்தார். எளிய குடும்பத்தில் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்த இவர், இவருடைய தாய் வழி தாத்தா வேலைபார்த்த கடை ஈரோட்டில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டதால் காஞ்சிபுரத்திற்கு குடியேறிய சில நாட்களிலேயே கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தனர்.
அங்குள்ள கல்யாணம் தொடக்க கல்வியில் கல்வி பயின்றார். 1897-ஆம் ஆண்டு மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தொடக்க கல்வியை பூர்த்தி செய்தார். பின்னர் கும்பகோணம் உயர்நிலை பள்ளியில் உயர்நிலை படிப்பு பயின்றார். இவர் சிறு வயதிலே யாருடைய தயவும் இல்லாமல் கணிதத்தின் வியப்பூட்டும் அடிப்படை உண்மைகளை கண்டறிந்தார். 1909-இல் இவருக்கு ஜானகி என்பவருடன் திருமணமாகி குடும்பஸ்தர் ஆனார். சிறு வயதிலிருந்தே தான் எழுதிய கணித குறிப்புகளை தாள்களில் எழுதி வைத்து கொள்வார். இவரின் திறமையை கண்டு வியந்த சென்னை துறைமுகம் கழக தலைவர் ஸ்ப்ரிஸ் என்பவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு இவருடைய கணித குறிப்புகளை அனுப்பி வைத்தார். பேராசிரியர் ஹார்டி என்பவர் இந்த குறிப்புகளை கண்டு வியந்து இராமானுஜருக்கு இங்கிலாந்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
அழைப்பை ஏற்று 1914-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். பின்னர் மூன்று ஆண்டுகள் ட்ரினிட்டி கல்லூரியில் பயிலும்போது கிட்டத்தட்ட 32 கட்டுரைகளை எழுதி தமிழகத்தை வியக்க வைத்தார். பின்னர் இங்கிலாந்து நாடு அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராகவும் பின்னர் கேம்ப்ரிட்ஜ் கழகத்தின் பெல்லோஷிப் பதவியும் தந்தது. அதன் பின் 33 வயதை பூர்த்தி செய்வதற்குள் சிறு வயதில் இயற்கை எய்தினார். இராமானுஜர் மறைந்தாலும் அவருடைய கோட்பாடுகள் தான் தற்போது அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்பு பொறியியல் துறை வரை பல துறைகளின் உயர் மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கணித மேதையான இவருடைய சாதனைக்கு 2012-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அவர்கள் கணித மேதை பிறந்த நாளான டிசம்பர் 22-ஐ இந்தியாவின் தேசிய கணித தினமாக அறிவித்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணித தினமான இன்று ராமானுஜர் நினைவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. மேலும் இன்றைய நாளில் தான் 1851-ஆம் ஆண்டு இந்தியாவின் முதலாவது சரக்கு கப்பல் உத்திராஞ்சல் நகரில் இருந்து ரூர்க்கி நகரை நோக்கி செலுத்தப்பட்டது.