நியாய விலை கடைகளுக்கு இனி உளுந்தம் பருப்பு இல்லை
வேலுசாமி (Author) Published Date : Nov 15, 2017 21:26 ISTஇந்தியா
சென்னை தலைமை செயலகத்தில் பொது விநியோக திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜர் தலமையில் நடைபெற்றது. இதன் பின் அமைச்சர் காமராஜர் கூறியதாவது " தமிழகத்தில் இதுவரை 1.71 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும். ஸ்மார்ட் இல்லாதவர்களுக்கும் தற்போது மானிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக எஸ்.எம்.எஸ் வருவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர். இனிமேல் பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக எஸ்.எம்.எஸ் வந்தால் தகவல் தெரிவியுங்கள். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான செய்தி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் ஆக வரும்.
ரேஷன் கடைகளுக்கு மக்கள் விரும்பாத மைசூர் பருப்பு அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. மைசூர் பருப்பு, துவரம் பருப்பு, கனடா பருப்பு கொள்முதல் செய்ய மாதந்தோறும் டெண்டர் விடப்படுகிறது. எது உடனடியாக கிடைக்கிறதோ அது வாங்கப்படுகிறது. மைசூர் பருப்பால் கேடு என நிரூபிக்கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்குக் முன்னதாக 13 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 7 ஆயிரம் டன் உளுந்தம் பருப்பு வாங்கப்பட்டது. ஒருவருக்கு உளுந்தம் பருப்பையும், ஒருவருக்கு துவரம் பருப்பையும் வழங்கப்பட்டது. இதனை தடுக்க அணைவருக்கும் ஒரே பருப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. உளுந்தம் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை. சர்க்கரை விலையை பொறுத்தவரை ஏழை மக்கள் 19 லட்சம் அட்டைகளுக்கு 13.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் அந்தியோதய அட்டை தவிர மற்றவர்களுக்கு சர்க்கரை வழங்கப்படுவதில்லை. " என்று அவர் தெரிவித்தார்.