தூய்மையாக செயல்பட்ட சன்னிசைடு குடியிருப்புக்கு தமிழ்நாட்டின் ஆளுநர், அமைச்சர் பாராட்டு
ராசு (Author) Published Date : Nov 15, 2017 11:03 ISTஇந்தியா
கோயம்பத்தூரில் உள்ள சன்னிசைடு (SunnySide) குடியிருப்பு தற்போது வரை 'குப்பைகளை அறவே அகற்றுதல் (No Dumping – My Waste, My Responsibility)' என்ற திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றும் முறையை மேற்கொண்டு வருகிறது. இதனை கவுரவபடுத்த தமிழ்நாட்டின் ஆளுநர் திரு பன்வரிலால் புரோஹித் அவர்கள் இன்று வருவதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 7.30 மணியளவில் ஆளுநர், அமைச்சர் திரு.வேலுச்சாமி மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் சன்னிசைடு குடியிருப்பு பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் குடியிருப்பில் வசிப்பவர்களிடம் இந்த வகையான நடைமுறைகளை கேட்டறிந்தனர்.
இதனை அடுத்து அங்குள்ள விநாயகர் கோவிலில் ஆளுநருக்கும், அமைச்சருக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது. மேலும் ஆளுநர் அங்குள்ள அனைத்து மக்களிடமும் மிகவும் சகஜமாக பழகி (People Friendly Governor) அவர்களிடம் கலந்துரையாடினார். ஸ்வச் பாரத் (Swachh Bharat) என்ற அமைப்பை ஊக்குவிக்கும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு.வேலுச்சாமி , இந்த சன்னிசைடு (SunnySide) குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் வரும் காலங்களில் குப்பைகளை அறவே ஒழித்துவிடலாம். மேலும் அவர் கோயம்பத்தூரில் அடுத்து வரவிருக்கும் திட்டங்களான போக்குவரத்தை கட்டுப்படுத்த மேம்பால திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவைகளை பற்றி கலந்துரையாடினார்.
இதனை அடுத்து பேசிய ஆளுநர் அவர்கள் " எனக்கு அதிகமாக தமிழ் தெரியாது. இருந்தாலும் இந்த குடியிருப்பில் நீங்கள் மேற்கொள்ளும் நடைமுறைகளையும், மக்களின் நடவடிக்கைகளையும் வைத்து நான் புரிந்து கொண்டேன். தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்பது இதுவே முதன்முறையாகும். நான் மஹாராஷ்டிராவில் பணி புரிந்த போது இந்தியாவில் மகாராஷ்டிராவில் நல்ல முறையில் தூய்மையை கடைபிடிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் மகாராஷ்டிராவை விட தமிழ் நாட்டில் அதிகம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கிறார்கள், முக்கியமாக கோயம்பத்தூரில் உள்ள சன்னிசைடு (SunnySide) குடியிருப்பை பார்த்த பின்னர் நான் புரிந்து கொண்டேன். இந்த குப்பைகளை அகற்றும் திட்டத்தை கையாண்ட இப்பகுதி மக்களுக்கும், இத்திட்டத்தில் ஆர்வம் காட்டி ஊக்குவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நான் அடுத்த முறை இந்த குடியிருப்பிற்கு வரும்போது நான் நிச்சயம் தமிழில் பேசுவேன். " என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஸ்வச் பாரத் (Swachh Bharat) என்ற தூய்மை இந்தியா அமைப்பு தற்போது இந்தியா முழுவதும் குப்பைகளை அகற்றியும், தூய்மைப்படுத்தியும் வருகிறது. ஏராளமான இளைஞர்கள், தன்னார்வலர்கள் இந்த அமைப்பில் இணைந்து இந்தியா முழுவதும் தூய்மை படுத்தி வருகின்றனர். இந்த அமைப்பானது சன்னிசைடு (SunnySide) குடியிருப்பு மேற்கொண்ட நடைமுறைகளை பார்த்து அமைச்சரிடம் ஆலோசித்து ஆளுநரை தற்போது வரவழைத்து அப்பகுதி மக்களை கவுரவபடுத்தியது குறிப்பிடத்தக்கது.