தூய்மை இந்தியா! தூய்மையான சன்னிசைடு குடியிருப்பு!
ராசு (Author) Published Date : Nov 14, 2017 21:39 ISTஇந்தியா
கோயம்பத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவைகளில் பெரும்பாலான குடியிருப்புகள் மிகுந்த சுத்தம் சுகாதாரம் போன்ற நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றனர், இவற்றில் 'சன்னிசைடு' "SunnySide" குடியிருப்பும் ஒன்று. இந்த 'சன்னிசைடு' குடியிருப்பு சுமார் 250 வீடுகளை கொண்டது. இந்த குடியிருப்பு பீளமேடு, பன் மால் (FUN MALL) சாலையில் உள்ள நேஷனல் மாடல் (National Model) பள்ளி அருகே அமைந்து உள்ளது.
இந்த குடியிருப்பின் தலைவர் திரு.செந்தில் அவர்கள் கோயம்பத்தூர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் குப்பைகளை அகற்றும் பணியை பார்த்துள்ளார். அதன் பின்னர் நம்முடைய குடியிருப்பு பகுதியிலும் இந்த வகையிலான நடைமுறைகளை மேற்கொண்டால், வருங்கால சமுதாயம் பிளாஸ்டிக் கழிவில் இருந்து விடைப்படுவதுடன், மாநகராட்சிகும் உறுதுணையாக இருக்கும் என்று எண்ணி குடியிருப்பு குழு உறுப்பினர்களிடும் ஆலோசித்தார். அதன்படி இந்த குப்பை ஒழிக்கும் முயற்சியில் திரு.ரூபா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி அதற்கான பணிகளும் மேற்கொண்டார். இதனை அடுத்து சன்னிசைடு குடியிருப்பில் வசிக்கும் அனைத்து குடியிருப்புவாசிகளிடம் சென்று தனித்தனியாக இந்த நடைமுறையை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இந்த ஆலோசனைக்கேற்ப குடியிருப்பில் வசிப்பவர்களும் இந்த நடைமுறைகளை தனித்தனியாக அமல்படுத்தினார். தொடக்கத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் தற்போது இந்த குப்பையை ஒழிக்கும் திட்டம் அனைவரிடமும் பாராட்டை பெற்று மூன்று வருடமாக தற்போது வெற்றிகரமாக அமல்படுத்திவருகின்றனர்.
இந்த திட்டத்திற்கென்று தனியாக ஒரு குழுவை அமைத்துள்ளனர். தற்போது வரை திரு.செந்தில் மற்றும் குழு உறுப்பினர்கள் உதவியுடன், திருமதி.ரூபா அவர்களின் ஆர்வத்தினாலும் அந்த குடியிருப்பு பகுதியில் 'குப்பைகளை அறவே அகற்றுதல்' (No Dumping – My Waste, My Responsibility) எனப்படும் முறையை பின்பற்றி குப்பையை மூன்றாக பிரித்து சுத்தம் செய்கிறார்கள்.
இந்த திட்டத்தின்படி மூன்று பிரிவுகளாக தேவையற்ற பொருட்களை தனித்தனி குடியிருப்புகளில் சேகரிக்கின்றனர். தனித்தனி வீடுகளில் சேகரித்த தேவையற்ற பொருட்களை ஒன்றாக சேகரித்து குப்பைகளை அகற்றுகின்றனர். அதன்படி பச்சை நிறத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் வீணான உணவு பொருட்களையும், சிகப்பு நிறத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் வீணான பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் கவர்களையும், வெள்ளை நிறத்தில் ஒரு நூல் பையில் வீணான காகிதங்கள் போன்றவற்றையும் சேகரிப்பதற்காக உபயோகித்து வருகிறார்கள்..
இவ்வாறு செய்வதனால், குப்பைகளை சுலபமான முறையில் சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த முறையை இவர்கள் மூன்று ஆண்டுக்கு மேல் பின்பற்றி வருகிறார்கள். இந்த முயற்சி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அதன் பிரதிபலனாக நாளை 15-11-2017 தமிழ்நாட்டின் ஆளுநர் திரு பன்வரிலால் புரோஹித் அவர்கள் சன்னிசைடு குடியிருப்பிற்கு வந்து கவுரவப்படுத்த உள்ளார்.
தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று கவுரவப்படுத்துவது இதுவே முதன் முறையாகும். சன்னிசைடு குடியிருப்பு பகுதி மக்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை வெகுவிரைவாக மக்களிடம் கொண்டு சென்று மக்கள் அனைவரும் இந்த திட்டத்தினை கையாள்வார்கள் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.