கும்பமேளா, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமாக அங்கீகாரம் - யுனெஸ்கோ
வேலுசாமி (Author) Published Date : Dec 08, 2017 13:17 ISTஇந்தியா
ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ அமைப்பானது இந்துக்களால் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும் கும்பமேளாவை இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரித்துள்ளது. இது குறித்து மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா தனது சமூக வலைத்தளத்தில் "இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமாக கும்பமேளாவை அங்கீகரித்தது அனைவரும் பெருமைப்படும் விஷயமாகும். உலக மக்கள் அனைவரும் ஜாதி மதமின்றி பல கோடிக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் கூடும் நிகழ்வு கும்பமேளா தான்." என்று தெரிவித்துள்ளார்.
இந்த கும்பமேளா அல்லது கிண்ணத் திருவிழாவானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துக்களால் நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மட்டும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். கங்கை, யமுனை, கற்பனை நதியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இடம் திரிவேணி சங்கமம் ஆகும். அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடக்கும் இந்த கும்பமேளாவானது மற்ற இடங்களில் நடக்கும் திருவிழாவை விட மிக புகழ்பெற்றது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா அறை கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இந்த அறை கும்பமேளா அலகாபாத், அரித்வார் ஆகிய இடங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. வேத நம்பிக்கையின் படி சாகாவரம் தரக்கூடிய அமிர்தத்தின் துளிகள் வானில் இருந்து திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற பானையில் இருந்து இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவ்விடங்களில் மக்கள் புனித நீராடினால் அக புற அழுக்குகள் நீங்குவதாக கூறப்படுகிறது.
இந்த கும்பமேளாவில் கூடும் மக்கள் நெரிசல்களினால் ஒவ்வொரு கும்பமேளா அன்றும் பல பக்தர்களின் உயிர்கள் பறிபோகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் 36 பக்தர்கள் கூட்ட நெரிசலினால் பலியாகினர். இதே போல் 2003-ஆம் ஆண்டு நாசிக்கில் நடந்த கும்பமேளாவில் 39 பக்தர்களின் உயிர்கள் பறிபோனது.