பாரதப் பிரதமர் மோடிக்கு இந்தியக் குடிமகன் கமல்ஹாசனின் ட்விட்டர் வீடியோ
ராசு (Author) Published Date : Apr 12, 2018 12:05 ISTஇந்தியா
தமிழகம் வந்த பிரதமர் மோடியை எதிர்த்து பல கருப்பு கொடிகள் ஏந்தி பல போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு வாரம் முன்னதாகவே, இதற்கான ஆயத்தம் தொடங்கிவிட்டது. பிரதமர், இன்று வரை, இந்தப் போராட்டங்களுக்கு செவி சாய்க்காமல் இருக்கிறார் என்று தமிழக ஊடகங்கள் சொல்லத்தொடங்கி விட்டன. போராட்டங்களின் உச்சகட்டமாக, சென்னையில் நடைபெறவிருந்த ஐபில் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் சமீபத்தில், தன் ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டதாவது, தமிழகத்தில் தலை தூக்கியிருக்கின்ற பிரச்சனை குறித்து தாங்கள் அறியாதது அல்ல. காவிரிக்கான நீதி வழங்கப்பட பின்னும், அதை நடைமுறைப்படுத்தவில்லை. அந்தக் கடமையை இன்னும் தாமதிக்காமல் செய்து முடிக்க வேண்டும். இதை நினைவுறுத்த வேண்டியது என் உரிமை. பாமரர்களும் பண்டிதர்களும், இந்த கால தாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்பத்தொடங்கிவிட்டார்கள். இது மத்திய அரசுக்கு ஆபத்தானது மட்டுமல்ல அவமானமும் கூட. இந்த எண்ணத்தை மாற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும், விவசாயிகளுக்கும், தமிழர்களுக்கும், கன்னடர்களுக்கும் நீதி கிடைக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும். தமிழகத்தில் நிலவும் நிலையை மாற்ற வழி செய்யுங்கள். இந்த வீடியோவில் மறந்தவற்றை அடுத்த வீடியோவில் சொல்கிறேன். வாழ்க இந்தியா, வாழ்க நீங்கள். இவ்வாறு, மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.