தன்னுடைய வில்லன் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்த பாபி சிம்ஹா
வேலுசாமி (Author) Published Date : May 31, 2018 18:04 ISTபொழுதுபோக்கு
சிங்கம் 3 படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சாமி ஸ்கொயர்'. சாமி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஆறுச்சாமி, ராமசாமி என்ற கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் விக்ரம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதல் பாகத்தில் இறந்த பெருமாள் பிச்சையின் மகன்களாக பாபி சிம்ஹா, ஜான் விஜய், ஓஏகே சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் ராதிகா என்ற கதாபாத்திரத்திலும், காமெடி நடிகர் சூரி வீச்சுகத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் உயர் அதிகாரியாக பிரபு மற்றும் சஞ்சய், ஐஸ்வர்யா, உமா ரியாஸ் கான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "இயக்குனர் ஹரி இயக்கத்தில் முதன் முறையாக நடிக்கிறேன். இந்த படத்திற்கு முன்பு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று தான் முடிவு செய்தேன். கருப்பன் படத்தில் வில்லனாக நடித்ததற்கு விஜய் சேதுபதியுடனான நட்பே காரணம். அவர் கேட்டுக்கொண்ட பிறகு உடனே நடிக்க சம்மதித்தேன். இந்த படத்திற்கு பிறகு இத்தோடு வில்லன் கதாபாத்திரத்தை நிறுத்தி கொள்ளலாம் என்றிருந்த போது ஹரி சார் கேட்டு கொண்டார்.
அவர் கேட்ட பிறகும் நான் நடிக்க விருப்பமில்லாமல் தான் இருந்தேன். ஆனால் முழு கதையை கேட்டவுடன் உடனே நடிக்க சம்மதித்து விட்டேன். இந்த படத்தில் வில்லனுக்காக இது தவிர தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதையை அவர் உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளேன். என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு இதுவரை கண்டிராத அளவிற்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.