வடசென்னை பகுதியின் முதல் பகுதியை நிறைவு செய்த படக்குழு
வேலுசாமி (Author) Published Date : Feb 22, 2018 15:30 ISTபொழுதுபோக்கு
நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி 2, வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இவர் நடித்து வரும் 'வட சென்னை' படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிசோர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் 1970 காலங்களில் நடக்கும் கதையை சித்தரித்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு கடந்த 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 30 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பென்னி ஹில்ஸ் என்ற பகுதியில் நடத்தப்பட்டது.
பின்னர் இந்த படப்பிடிப்பு தாமதமாக இயக்குனர் வெற்றி மாறன் தன்னுடைய தேசிய விருது படமான 'விசாரணை' படத்தில் பிசியாகி விட்டார். தனுசும் தன்னுடைய ப பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களின் வேலைகளை தொடங்கினார். இதன் பிறகு இயக்குனர் வெற்றி மாறன் இந்த படப்பிடிப்பை நிறுத்தி நடிகர் ஜிவி பிரகாஷின் புது படத்தை இயக்க ஆரம்பித்தார்.
இதனை அடுத்து சமீபத்தில் தொடங்கிய 'வடசென்னை' படத்தின் படபிடிப்பு முடிவடைந்து தற்போது முதல் பகுதியை நிறைவு செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் படக்குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.