மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் நடிகையர் திலகம் திரைவிமர்சனம்
விக்னேஷ் (Author) Published Date : May 11, 2018 16:33 ISTபொழுதுபோக்கு
தெலுங்கு இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'நடிகையர் திலகம்'. இந்த படம் தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் சிறு வயதில் தந்தையை இழந்து வறுமைக்கு ஆளான சாவித்ரி எப்படி துணிச்சலாக எதிர்வரும் சவால்களை எதிர்கொண்டார்? எப்படி திரைத்துறையில் முன்னேறி சாதித்து காட்டினார்? என்பதை மிகவும் அழகாக இயக்குனர் நாக் அஸ்வின் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
இந்த படத்தில் சாவித்ரி கதாபத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசன் கதாபத்திரத்தில் துல்கர் சல்மான், மதுரவாணி கதாபத்திரத்தில் சமந்தா, விஜய் அந்தோணி கதாபத்திரத்தில் விஜய் தேவரகொண்டா என இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளனர். இந்த படத்தில் மதுரவாணி மற்றும் விஜய் அந்தோணி இருவரின் தேடலும் சாவித்ரியின் வாழ்க்கையை மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கிறது. நாளிதழ் ஒன்றில் ஜெமினி கணேசன் எடுத்த சாவித்ரி புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவர் மனதையும் கவர்கிறது.
இதன் மூலம் சாவித்ரிக்கு சினிமா துறையில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கிறது. பிறகு சினிமாவில் அறிமுகமாகி தனது சிறப்பான திறமையின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைக்கிறார். ஒரு சாமானிய ஏழை குடும்பத்தில் மகளாக பிறந்து, தன்னுடைய அசாத்தியமான நடிப்பு திறமையால் மக்களின் மனதை கொள்ளையடித்து, பிறகு பரிதாப நிலைக்கு சென்று உயிரிழந்த நடிகை சாவித்ரியை தன்னுடைய ஒவ்வொரு காட்சியிலும் மனதில் பதியவைக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். இந்த படம் முழுக்க முழுக்க 1940-80 காலங்களில் நடந்த கதை என்பதால் டானி சன்சேஸ் - லோபஸ் ஆகியோரின் ஒளிப்பதிவுகள் மூலம் ரசிகர்களை அந்த காலகட்டத்திற்கே நகர்த்தி செல்கிறது.
பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வசனங்கள் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் கை தட்டல்களும் விசில் சத்தமும் காதை கிழிக்கிறது. இந்த படத்திற்கு தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயரின் இசை, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் எடிட்டிங் பணிகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த படத்தில் ராஜேந்திர பிரசாத், பானுபிரியா, மாளவிகா நாயர், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், மோகன் பாபு என அனைவருமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படம் நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியை மீண்டும் காண வாய்ப்பளித்த இயக்குனர் நாக் அஸ்வினுக்கு பாராட்டுக்கள்.