போக்கிரி பட இயக்குனருடன் இணையும் தல அஜித்
ராதிகா (Author) Published Date : Feb 14, 2018 11:26 ISTபொழுதுபோக்கு
தல அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் இணைந்து தனது 58வது படமான 'விசுவாசம்' படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 22ம் தேதி சென்னை பகுதியில் துவங்கவுள்ளது. தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வரும் படக்குழு கடந்த நாட்களில், இப்படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இசையமைக்கும் பணியில் டி. இமான் இணைந்திருப்பதாக தகவலை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தல அஜித்தின் 59வது படத்திற்கான தகவல் வெளிவந்துள்ளது.
அஜித்தின் 59வது படத்தினை இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனரான பிரபு தேவா இயக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் முதல் முதலாக தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின்னர் 'இந்து' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த 'போக்கிரி' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இதற்கு அடுத்த படியாக வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். மேலும் இவர் ஹிந்தி படங்களையும் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் வெளிவந்த 'மின்சாரக் கனவு' திரைப்படத்தில் இடம்பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றிருந்தார்.