பெட்டிக்கடையின் அருமையை உணர்த்தும் சமுத்திரக்கனியின் புதுப்படம்
மோகன்ராஜ் (Author) Published Date : Jul 26, 2018 11:51 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி நடிப்பில் பேரன்பு, கொளஞ்சி, ஆண் தேவதை, வட சென்னை, கிட்ணா, வெள்ளை யானை போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஒரு இயக்குனராகவும் சசிகுமாரை வைத்து நாடோடிகள் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் 'பெட்டிக்கடை' என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.
இயக்குனர் இசக்கி கார்வண்ணன், கடந்த 2016இல் வெளியான 'பகிரி' படத்தை இயக்கியவர். இவர் இந்த படம் குறித்து கூறுகையில் "சுமார் ஒரு 10 வருடங்களுக்கு முன்பு நம்முடைய ஒவ்வொரு தெருவிலும் ஒரு பெட்டிக்கடைகள் இருக்கும். அப்போது பெட்டிக்கடைகள் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக இருந்தது. பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல் அந்த தெருவில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பார்.
தனது கடைக்கு வரும் மக்களை, வாடிக்கையாளர்களாக பாராமல் ஒரு உறவினர் போன்று பழகும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் இந்த உறவு சங்கிலியை கார்ப்பரேட் நிறுவனங்கள் முறித்து விட்டது. சாதாரணமாக பெட்டிக்கடைகளில் விற்கும் மளிகை சாமான்கள் காய் கறிகள் குறைந்த விலைக்கு விற்று வந்தனர். அதனால் யாருக்கு பாதிப்பும் இல்லாமல் நாடும் நலமாக இருந்து வந்தது.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதனை மொத்தமாக விற்பனை செய்வதால் சுகாதாரம் சீர்கேடு அடைந்துள்ளது. ஆடம்பரத்திற்காக பெட்டிக்கடை போன்ற உறவு சங்கிலியை அறுத்த கார்ப்பரேட் நிறுவனங்களை மக்களுக்கு புரிய வைக்கும் படமே இந்த பெட்டிக்கடை" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனியுடன் வீரா, சாந்தினி, சுந்தர், அஸ்மிதா, வர்ஷா, மொட்டை ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மரியா மனோகர் இசையமைக்கிறார்.