தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் புதிய படங்களின் வெளியீடு குறித்து நாளை முடிவு
வேலுசாமி (Author) Published Date : Apr 18, 2018 11:11 ISTபொழுதுபோக்கு
கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் நிறுவனங்களின் டிக்கெட் கட்டணங்கள் குறைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை தொடர் போராட்டங்களில் தயாரிப்பாளர் சங்கம் ஈடுபட்டு வந்தது.
தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போராட்டத்தால் புதிய படங்களின் எண்ணிக்கைகள் மலை போல் குவிந்துள்ளது. இதையெல்லாம் தயாரிப்பாளர் சங்கம் எப்படி சமாளிக்க போகிறது என தெரியவில்லை. ஏராளமான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த போராட்டத்தால் பாதிப்படைந்துள்ளனர். தற்போது தயாரிப்பாளர் சங்கம் கே செரா செரா,ஏரோக்ஸ் போன்ற புதிய டிஜிட்டல் சேவை நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் பிறகு தியேட்டர் உரிமையாளர்களிடம் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் விரைவில் முடிவடையலாம் என கருதப்பட்ட நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளது. புதிய படங்களின் வெளியீடுகள் எப்போது என்பது நாளை முடிவு செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.