கந்துவட்டி கொடுமையால் உயிர் இழப்பு - விஷால் கண்டனம்
யசோதா (Author) Published Date : Nov 22, 2017 10:30 ISTபொழுதுபோக்கு
கந்து வட்டி கொடுமையினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பல உயிர்கள் பலியாகவும் தொடங்கிவுள்ளது. முன்பெல்லாம் வறுமை கோட்டில் இருப்பவர்கள் பசியின் கொடுமையில் உயிர் இழப்புகள் நிகழும். தற்பொழுது கந்துவட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என பல வித புது வட்டிகளின் பெயரில் உயிர் இழப்புகள் நிகழ்கிறது.
நடிகர், இயக்குனர் சசிகுமாரின் மைத்துனர் அசோக் குமார். இவர் திரைப்பட துணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக பணியிலும் பணிபுரிந்து வந்தார். கந்துவட்டி கொடுமையால் அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் எனவும், கடன் கொடுத்தவர்கள் சசிகுமாரை சித்ரவதை செய்வதை சகித்துக்கொள்ள முடியவில்லை எனவே, சசிகுமாரை மீட்பதற்கு வழி இல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறேன், தனியாக இருக்கும்போது தனது மனசாட்சியுடன் அன்புச்செழியனை பேசச் சொல்லுங்கள் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர், தயாரிப்பு சங்கத்தின் தலைவர் விஷால் பத்திரிகை நிறுவத்திடம் பேட்டி அளித்து அவரது ட்விட்டரில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும் !
கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இன்று தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன் . தயாரிப்பாளர் சங்கத்திற்கு புது நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுபோல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு காட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்சனை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.
காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலை அல்ல. கொலை. இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல் துறை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.