ஆர்கே நகர் தேர்தலில் நான் எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவில்லை - நடிகர் கவுண்டமணி
ராசு (Author) Published Date : Dec 11, 2017 16:26 ISTPolitics News
ஆர்கே நகர் தொகுதி தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவினால் காலியாக இருக்கிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை அடுத்து சுமார் 146 தாக்கல் செய்த வேட்புமனுவில் 72 வேட்பாளரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 74 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு பல தரப்பட்ட விவாதங்கள் நடந்து வந்தது. தற்போது ஆளும் கட்சியான அதிமுக சார்பில் மதுசூதனும், திமுக சார்பில் மருதுகணேசனும் போட்டியிடுகின்றனர்.
இதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கவுண்டமணி குறிப்பிட்ட ஒரு கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனை நடிகர் கவுண்டமணி தற்போது மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது "நான் எந்தவித கட்சியையும் சாராதவன், ஆர்கே நகர் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்யப்போவதாக வெளியான தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. இது போன்ற தவறான செய்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.