போயஸ் கார்டனில் நடந்த அதிரடி சோதனை
யசோதா (Author) Published Date : Nov 19, 2017 00:20 ISTPolitics News
சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இல்லங்களில் கடந்த 9-ஆம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை,பெங்களூர் உள்ளிட்ட 187 இடங்களில் 300 அதிகாரிகளுக்கு மேல் இந்த சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள், ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றை கைப்பற்றியதாக தகவல் வெளியாகின. இதனை அடுத்து தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில் ஜெயலலிதா தங்கியிருந்த அறை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியுள்ளனர். ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தங்கியிருந்த அறையில் இருந்து தொடங்கப்பட்ட இந்த சோதனையில் 4 மணி நேரம் வருமான வரித்துறையினர் அலசி ஆராய்ந்தனர். சோதனையின் முடிவில் லேப்டாப், இரண்டு பென்ட்ரைவ் மற்றும் ஜெயலலிதாவிற்கு இதுவரை வந்த கடிதங்கள் போன்றவற்றை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த சோதனை குறித்து டி.டி.வி தினகரன் அளித்த பேட்டியில் " அதிமுகவை அழித்து தங்கள் கட்சியை வளர்க்க வருமானவரி துறையினரை ஏவி விட்டுருக்கிறார்கள். இந்த சோதனை அம்மாவின் விசுவாசிகள் எனக்கூறியவர்கள் திட்டமிட்டு சதியை செய்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றப்போவதாக சொல்லிவிட்டு இப்படி சோதனைகளை நடத்துகின்றனர். இந்தச் செயலுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று பார்ப்போம். " என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சோதனையின் போது வந்த தீபா " ரெய்டு குறித்து எனக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் வேதா இல்லம் இருக்கிறது. செய்தியை பார்த்துதான் நான் இங்கு வந்துள்ளேன். போயஸ் கார்டன் குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளதால் எனக்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு முன்பு எனக்கு தெரியபடுத்தியிருக்க வேண்டும். என்னுடைய் சகோதரர் தீபக்கிடமும் சோதனை குறித்து அனுமதி பெறவில்லை என்னிடமும் அனுமதி பெறவில்லை. ஜெயலலிதாவிற்கு அவமான ஏற்படுத்தவே இந்த சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தியிருக்கின்றனர்." என்று தெரிவித்துள்ளார். "
வருமான வரித்துறையினரின் இந்த சோதனை டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து வேதா நிலையம் முன்பு ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் அவர்களை கைது செய்துள்ளனர். இதனால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வீடுகளின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.