133 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய தேசிய காங்கிரஸ்
வேலுசாமி (Author) Published Date : Dec 28, 2017 14:25 ISTPolitics News
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி கடந்த 16-ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர் ஜவஹர்லால் நேரு பரம்பரையின் 6வது தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது, இந்தியாவின் மாபெரும் கட்சிகளுள் ஒன்றாக விளங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கேற்றனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 15வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இந்த கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது. 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவதை முதல் குறிக்கோளாக கொண்டது. உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து இரண்டாவது 1886, டிசம்பர் 27-இல் நடைபெற்ற கூட்டத்தில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நேருஜி அறிவிக்கப்பட்டார். இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
காந்தி கால பகுதி :
மகாத்மா காந்தி 1915-இல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். வெள்ளையர்களுக்கு எதிராக அறவழிப்போரை நடத்தியதால் இந்தியாவிலும் இவர் புகழ் பரவியிருந்தது. இந்திய விடுதலை போரில் தாயகம் திரும்பியதும் தன்னை உட்படுத்தி கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார்.
இந்திரா காந்தி கால பகுதி :
நேருவின் மறைவுக்குப் பின் இவர் லால் பகதூர் சாசுத்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராக பணியாற்றினார். லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் மறைவை ஒட்டி பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் கு. காமராசின் முயற்சியும் காரணமாகும். பின் 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாக கூறி இந்திரா காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு காரணம் என கருதப்படுகிறது.
இதனால் காங்கிரசு இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர் குழு நிறுவன காங்கிரசு என்ற பெயரை சூட்டிக்கொண்டது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமை புரட்சி நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்காள தேசம் உருவாக காரணமாக இருந்தார். 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.