ஆன்மீக பயணமாக இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்
வேலுசாமி (Author) Published Date : Mar 10, 2018 14:02 ISTPolitics News
எப்போதும் இறை நம்பிக்கையிலும், ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடுடைய ரஜினிகாந்த் தற்போது ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என பிஸியாகவே இருந்து வருகிறார். இவர் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காலா' படம் வரும் ஏப்ரல் மாதம் 27 இல் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக இயக்குனர் சங்கரின் '2.0' படமும் வெளியாகவுள்ளது. இவ்விரண்டு படங்களுக்கு பிறகு தீவிர அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் இவருடைய அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தீவிர அரசியலில் களமிறங்கவுள்ள ரஜினி தக்க தருணத்திற்காக காத்து கொண்டிருக்கிறார்.
இவருடைய நண்பர் கமல் ஹாசன் தனது கட்சி பெயரையும், சின்னத்தையும் தொடங்கி அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக சூப்பர் ஸ்டார் எப்போது தனது கட்சி பெயரையும் கொள்கையும் அறிவிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் எம்ஜிஆர் சிலையை திறக்க சென்ற ரஜினி தனது ஆன்மீக அரசியலை பற்றியும், மக்களிடம் ஆன்மீக அரசியலை பற்றி உள்ள சந்தேகத்தையும் தீர்த்து வைத்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் "15 நாட்கள் இமையமலையில் தங்க முடிவு செய்துள்ளதாகவும், அங்கு சென்ற பிறகு தான் திரும்பி வர எத்தனை நாட்கள் ஆகும் என்பதும் முடிவு செய்யபடும்" என்று தெரிவித்துள்ளார். இவர் சென்னை விமானம் மூலம் சிம்லாவுக்கு சென்று அங்கிருந்து உத்திரபிரதேசம் ரிதிகேஷ், தர்மசாலா போன்ற இடங்களுக்கு செல்ல உள்ளார். இந்த ஆன்மீக பயணத்தில் வழியில் தனது வழிகாட்டிகளை சந்தித்து ஆசி பெற உள்ளார்.