இரண்டாவது T20 போட்டி இந்தியா அபார வெற்றி - சாதனையை நழுவவிட்ட இந்தியா
விக்னேஷ் (Author) Published Date : Dec 23, 2017 14:37 ISTSports News
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது T20 போட்டியில் இந்தியா வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது T20 போட்டி நேற்று மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, ராகுல் களமிறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 12 ஓவரில் 165 ரன்கள் விளாசினர். இதில் ரோஹித் சர்மா 118 ரன்களை குவித்தார். 12.4 வது பந்தில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் 11 வது ஓவரில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவர் மொத்தமாக 43 பந்தில் 12 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதனை அடுத்து களமிறங்கிய தோனியும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கொரை உயர்த்தினர். இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி தடுமாறியது. வீசிய ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது 15 ரன்களை குவித்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 260 ரன்கள் எடுத்தது. 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோசன் மற்றும் உபுல் தரங்கா களமிறங்கினர். இதில் நிரோசன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து குசல் பெரேரா களமிறங்கினார். 261 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம் என்று இந்தியா ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்க குசல் பெரேரா மற்றும் தரங்கா ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். இவர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணியும் தடுமாறியது. பின்னர் தரங்கா 47 ரன்களில் சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து திசாரா பெரேரா (0), குசல் பெரேரா (77) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் பின் களமிறங்கிய இலங்கை வீரர்கள் ஒற்றை ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்திய 260 ரன்கள் எடுத்தது. இதுவரை T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2016-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்து வருகிறது. தற்போது இந்தியா 260 ரன்கள் மட்டும் எடுத்து சாதனையை நழுவவிட்டது.
20 வது ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததே இதற்கு காரணமாகும். இருந்தாலும் இந்திய அணியின் T20 தொடரில் இந்த ஸ்கொர் அதிகபட்ச ஸ்கொராகும். இந்த போட்டியின் மூலம் ரோஹித் சர்மா 35 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதுவரை டேவிட் மில்லர் 35 பந்துகளில் 100 சதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார். தற்போது இந்திய அணியின் ரோஹித் சர்மா இவரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது T20 போட்டி மும்பையில் நாளை நடைபெற உள்ளது.