ஆப்லைனிலும் கூகுள் ட்ரென்ஸ்லேட்டில் எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்
வேலுசாமி (Author) Published Date : Jun 19, 2018 17:49 ISTTechnology News
பிரபல கூகுள் நிறுவன செயலிகளுள் ஒன்றான கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) உலகம் முழுவதும் மொழிமாற்ற சேவையினை கடந்த 2006 முதல் 12 வருடங்களாக வழங்கி வருகிறது. இந்த செயலியை ஒரு நாளைக்கு மட்டும் ஆன்லைனில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் உபயோகித்து வருகின்றனர். உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் இந்த செயலி கிட்டத்தட்ட 103 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது.
விண்டோஸ், ஆண்டிராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கும் இந்த செயலியானது வாக்கியங்கள் (Text), பேசும் விடியோக்கள் (Speech Videos) போன்றவற்றை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றம் செய்கிறது. இது தவிர இந்த செயலியானது புகைப்படங்களில் இருக்கும் வார்த்தைகளையும் மொழிமாற்றம் செய்யக்கூடிய வகையில் புது புது அம்சங்களை வழங்கி வருகிறது.
தற்போது வரை ஆன்லைனில் இன்டர்நெட் மூலம் செயல்பட்டு வந்த இந்த கூகுள் ட்ரென்ஸ்லேட் இனி இன்டர்நெட் இல்லாமலும் ஆஃப்லைனிலும் உபயோகப்படுத்த கூகுள் வழிவகை செய்துள்ளது. இந்த அம்சம் மூலம் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். பின்பு நெட்வொர்க் கிடைக்காத இடங்களிலும் இந்த செயலியை கொண்டு மொழிமாற்றம் செய்யலாம்.
இது தவிர இந்த செயலியானது மொழிமாற்றம் செய்யப்பட்ட வார்த்தைகளை மனித குரலில் விருப்பமான மொழிகளில் தெரிவிக்கிறது. இந்த அம்சம் மூலம் ஒவ்வொரு வார்த்தையாக மட்டுமல்லாமல் ஒரு முழு பத்தியையும் உடனடியாக மொழிமாற்றம் செய்ய முடியும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.